

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவத்தில் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணன் இன்று (மே 6) நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
வேங்கைவயல் மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிசம்பர் 26ம் தேதி தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவத்தில் விசாரணை நடத்திட ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணனை ஒரு நபர் ஆணையமாக நியமித்து உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணன் இன்று முற்பகல் வேங்கைவயல் கிராமத்துக்கு முதன் முறையாக சென்று குடிநீர்த் தொட்டியை பார்வையிட்டார். பின்னர், அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
விசாரணைக்கு பிறகு, புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மற்றும் சிபிசிஐடி போலீஸார் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.