Published : 05 May 2023 07:23 AM
Last Updated : 05 May 2023 07:23 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த மணமை கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து, புதுச்சேரி நோக்கிச் சென்ற அரசு பேருந்து மீது எதிர்திசையில் வந்த ஆட்டோ மோதிய விபத்தில், ஆட்டோவில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண் குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் அறிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து அரசு பேருந்து பயணிகளுடன் புதுச்சேரி நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தது. பேருந்தை உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கோபால் என்பவர் இயக்கிவந்தார்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே மணமை கிராமப்பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே சென்னையை நோக்கி வந்த ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில், ஆட்டோவில் பயணித்த சென்னை, ஆலந்தூர் வ.உ.சி.நகரை சேர்ந்த கோவிந்தன்(50). அவருடைய மனைவி அமுலு(47), தாயார் காமாட்சி(70), மற்றும் மகள் சுகன்யா(28), பேத்திகள் கனிஷ்கா(6), ஹரிப்பிரியா(8) ஆகிய 6 பேர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதீஸ்வரன், ஆய்வாளர் ருக்மாங்கதன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து நடந்த பகுதியை மாவட்ட எஸ்பி.பிரதீப் நேரில் பார்வையிட்டார். மேலும், அப்பகுதியில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் விபத்து அறிவிப்பு பலகைகள் அமைக்க அறிவுறுத்தினார்.
மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜ, துணை முதல்வர் அனிதா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
விபத்தில் உயிரிழந்த கோவிந்தனின் மகன் விஜய். இவருக்கு வரும் 25-ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. இதனால், செய்யூரை அடுத்த கீழச்சேரி கிராமத்தில் வசிக்கும் இளைய மகள் சுகன்யா மற்றும் அப்பகுதியில் உள்ள உறவினர்களுக்கு திருமண பத்திரிகை வைப்பதற்காக, தாயார் மற்றும் மனைவியுடன் நேற்று ஆட்டோவில் வந்துள்ளார். மேலும், பத்திரிகை வைத்துவிட்டு மகள் மற்றும் பேத்திகளை அழைத்துக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு ஆட்டோவில் திரும்பியதாக தெரிகிறது.
இந்நிலையில், மணமை அருகே அரசு பேருந்தின் மீது ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் வந்த நாய் உயிர் பிழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT