

கோவை: கோவையில் தீவிரவாத செயல்பாடுகளை தடுக்க காவல் பிரிவுகளை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகரில் 15 காவல் நிலையங்களில் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தீவிரவாத செயல்களை தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாநகர காவல் ஆணையர் வே.பால கிருஷ்ணன் பேசியதாவது: ஒவ்வொரு சிறிய தகவலும், பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான பெரிய முன்னேற்றங்களை பெற வழிவகுக்கும் என்பதால், கள அளவிலான அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அதேபோல, நீண்ட கால நடவடிக்கையில் தீவிரமான செயல்பாடுகள் உள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் கருத்தியல் நடவடிக்கைகளால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும். பொதுமக்களின் குறைகள் தொடர்பாக, வெளிப்படைத் தன்மையுடனும், பாரபட்சமின்றியும் காவல்துறையினர் பணியாற்ற வேண்டும். புகார் மீது நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். மாநிலம் முழுவதும் தீவிரவாத தடுப்புப் படையை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோவை மாநகரில் இதுபோன்ற நிகழ்வுகளில் முன் அனுபவம் இருப்பதால், அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க காவல் பிரிவுகளை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநகரில் 15 காவல் நிலையங்களில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சில காவல் நிலைய எல்லைகளில் உளவுத்துறைக்கு கூடுதல் பலம் அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.