

சென்னை: சென்னை அமைந்தகரை மேத்தா நகரை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி வரை மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் அடிப்படையில் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஆருத்ரா நிறுவனத்துடன் நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே. சுரேஷ் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர், ஆருத்ரா நிறுவனத்திடமிருந்து ரூ.15கோடி பெற்றதாகவும், அந்தபணத்தின் மூலம் சினிமா எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்த ஆர்.கே.சுரேஷை நேரில் ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சம்மன்அனுப்பினர். இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது.
தற்போது ஆர்.கே.சுரேஷ் துபாயில் இருக்கிறார். அவர் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்சார்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் ஏற்கெனவே ‘லூக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை விசாரணைக்கு ஆஜராகாமல் ஆர்.கே.சுரேஷ் தலைமறைவாக உள்ளதால் அவரது வங்கிக் கணக்கை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் சந்தேகப்படும்படியான பணப் பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆகையால் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது வங்கிக்கணக்கை முடக்கியுள்ளதாக போலீஸ் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.