பாம்பன் கடற்கரை பகுதியில் ஆயுதக் குவியல், கடத்தல் பொருட்கள் பதுக்கலா? - போலீஸார் தீவிர சோதனை

பாம்பன் கடற்பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்ட போலீஸார்.
பாம்பன் கடற்பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்ட போலீஸார்.
Updated on
1 min read

ராமேசுவரம்: பாம்பன் கடற்கரைப் பகுதியில் ஆயுதக் குவியல்கள் மற்றும் கடத்தல் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீஸார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

2018-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அன்று ராமேசுவரம் தங்கச்சிமடம் கடற்கரை அருகே அந்தாணியார்புரம் பகுதியில் ஒரு தோட்டத்தில் கழிவு நீர் கால்வாய் கிணறு அமைப்பதற்காக தோண்டினர். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடந்தபோது தமிழகத்தில் பயிற்சி பெற்ற இலங்கையைச் சேர்ந்த தமிழீழ போராளிக் குழுக்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியல் கண்டெடுக்கப்பட்டு அவை அழிக்கப்பட்டன.

இந்த ஆயுதக் குவியலிலிருந்து 5,500 எல்என்ஜி ரக துப்பாக்கி குண்டுகள், 4,928 எஸ்எல்ஆர் ரக துப்பாக்கி குண்டுகள், 400 இயந்திர துப்பாக்கிக் குண்டுகள், டெட்டனேட்டர்களை வெடிக்கச் செய்யும் சிலாப் 199, ராக்கெட் லான்சர் பொறிகள் 20, கையெறி குண்டுகள் 15, வயர் ரோல்கள் 8, கன்னி வெடிகள் 2, எக்ஸ்புளோசிவ் மோட்டார் 1 ஆகியன இருந்தன.

தொடர்ந்து மூன்று வாரங்கள் ஆயுதக்குவியல் கண்டெடுக்கப்பட்ட தோட்டம் மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் ஆய்வு செய்து மேலும் வேறு எங்கும் ஆயுதங்கள் இல்லை என்பதை வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸார் உறுதி செய்தனர்.

இந்நிலையில் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின் தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியிலிருந்து பாம்பன் கலங்கரை விளக்கம் பகுதி வரையிலும் கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் எஸ்.பி. தங்கதுரை மேற்பார்வையில் தனிப்பிரிவு போலீஸார், வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸார் ஆயுதக் குவியல்கள் மற்றும் கடத்தல் பொருட்கள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என தீவிர சோதனை மற்றும் விசாரணை நடத்தினர்.

தங்கச்சிமடத்திலிருந்து பாம்பன் வரையிலுமான கடலோரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவது ராமேசுவரம் தீவு மீனவக் கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in