பானிபூரியில் உப்பு குறைவாக இருந்ததால் பேக்கரியில் பெட்ரோல் குண்டுவீச்சு: திருப்பூரை சேர்ந்த 4 பேர் கைது

பானிபூரியில் உப்பு குறைவாக இருந்ததால் பேக்கரியில் பெட்ரோல் குண்டுவீச்சு: திருப்பூரை சேர்ந்த 4 பேர் கைது
Updated on
1 min read

திருப்பூர்: அவிநாசிபாளையத்தில் பேக்கரியில் தகராறு செய்து, பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் அருகே அவிநாசிபாளையம் பெருந்தொழுவு, அமராவதி பாளையம் சாலை பகுதியில் இருந்த பேக்கரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிலர் பானிபூரி சாப்பிட்டுள்ளனர். அப்போது பானிபூரியில் உப்பு குறைவாக இருப்பதாகக் கூறி, வாடிக்கையாளர்களுக்கும், கடைக்காரருக்கும் இடையே தகராறு எழுந்தது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், 4 பேரில் ஒருவர் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை பேக்கரியில் வீசினார். பாட்டில் வெடிக்காததால் சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 4 பேரும் தப்பினர். இச்சம்பவம் குறித்து பேக்கரியை கவனித்து வந்த சதீஷ்குமார் (30) என்பவர் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். பேக்கரியில் பெட்ரோல் குண்டுவீசியது திருப்பூர் செரங்காட்டை சேர்ந்த அஸ்வின் (21), தில்லைநகரை சேர்ந்த பூவலிங்கம் (25),சந்திராபுரத்தை சேர்ந்த சக்தி கணேஷ் (23), செவந்தாம்பாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார் (23) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in