

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 45 வயது பெண் மென் பொறியாளர் கிரிப்டோ கரன்சியில் ரூ.28.3 லட்சத்தை முதலீடு செய்து ஏமாந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் புனே காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் குமார் காட்கே நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புனேவை சேர்ந்த பெண் மென்பொறியாளரின் மொபைல் எண்ணை வாட்ஸ் அப் குழுவில் சேர்த்து பல்வேறு வகையான கிரிப்டோ கரன்சிகள் குறித்தும், அவற்றில் முதலீடு செய்தால் கிடைக்கும் லாபம் குறித்தும் மோசடியாளர்கள் ஆசை வார்த்தை கூறி அவரை முதலீடு செய்ய தூண்டியுள்ளனர். அதன் பின்பு அந்த மென்பொறியாளருக்கு கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மோசடி நபர்கள், கிரிப்டோ கரன்சி நிறுவனத்தின் செயலியை மென்பொறியாளரின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யச் சொல்லி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுமாறு கூறியுள்ளனர். அவரும் தனது முழு சேமிப்பு பணத்தை மட்டுமின்றி கடன் வாங்கியும் ரூ.28.3 லட்சம் வரை கிரிப்டோவில் முதலீடு செய்துள்ளார்.
ஆனால், உறுதியளித்தபடி முதலீட்டுக்கான லாபம் தராமல் இழுத்தடித்து பல ஆயிரங்களை மேலும் கடன் வாங்கி முதலீடு செய்யும்படி மோசடி நபர்கள் வற்புறுத்தவே அந்தப் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து மென்பொறியாளர் கிரிப்டோ கரன்சியை வாங்கியது தொடர்பான பணப்பரிமாற்றங்கள் குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
ஏமாற்றுப் பேர் வழிகள் வெளிநாட்டில் இருந்து இதுபோன்ற மோசடி சம்பவங்களை நிகழ்த்தியிருப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும் முன்பாக அதிலுள்ள ஆபத்துகளையும் உணர வேண்டியது அவசியம் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது. இவ்வாறு குமார் காட்கே தெரிவித்தார்.