

விழுப்புரம்: விழுப்புரம் அருகே 6 வயதுசிறுமி மற்றும் 4 சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து, ஆபாச வீடியோ எடுத்த 4 சிறுவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர்.
விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற இச்சிறுமி உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததைக் கண்ட ஆசிரியர் இதுபற்றி அச்சிறுமியிடம் விசாரித்துள்ளார். தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அச்சிறுமியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. உளவியல் மருத்துவர்கள் நடத்திய கலந்தாய்வில், அச்சிறுமி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து அச்சிறுமியிடம் குழந்தைகள் நல அலுவலர்கள் மேற்கொண்ட விசாரணையில், அச்சிறுமி வசிக்கும் பகுதியைச் சேர்ந்த 14 முதல் 17வயதுடைய நான்கு சிறுவர்கள் அவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னைப் போன்ற மேலும் அப் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர் களுக்கும், அவ்வாறு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாகவும் அச்சிறுமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீஸார், குறிப்பிட்ட அந்த 4 சிறுவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்தச் சிறுவர்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அப்பகுதியில் இந்த 6 வயது சிறுமி மற்றும் 4 சிறுவர்களுக்கு தொடர்ந்து கூட்டாக பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளனர்.
மேலும் அச்சிறார்களை ஆபாசமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் மற்றும்பெரியவர்கள் கவனக்குறைவாக இருந்த நேரத் தில் இதை அவர்கள் செய்து வந்துள்ளனர்.
இளஞ்சிறார் மன்றத்தில்... 4 சிறுவர்கள் மீது விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பாலியல் வன் கொடுமை, கடத்தல் மற்றும் போக்சோவில் 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும்விழுப்புரம் மாவட்ட இளஞ்சிறார் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் கூர்நோக்குஇல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.