Published : 02 May 2023 06:10 AM
Last Updated : 02 May 2023 06:10 AM
கும்பகோணம்: கும்பகோணத்தில் டீ தூள் வியாபாரி வீட்டின் முன்பு சார்ஜ் போடப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால், 2 ஸ்கூட்டர்கள், கார், டீ தூள் பாக்கெட்கள் உட்பட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
கும்பகோணம் ஆழ்வான்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்(46). டீ தூள் வியாபாரி. இவரது வீட்டின் கீழ்தளத்தில் டீ தூள் குடோன் வைத்துள்ளார். மேல்தளத்தில் உள்ள வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர், தனக்கு சொந்தமான கார் மற்றும் பேட்டரியில் இயங்கும் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வீட்டு வாசல் அருகில் உள்ள வராண்டா பகுதியில் நிறுத்திவைப்பது வழக்கம்.
இந்நிலையில், சதீஷ் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல வராண்டா பகுதியில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நிறுத்தி, பேட்டரிக்கு சார்ஜ் போட்டுவிட்டு, மாடிக்குச் சென்று உறங்கியுள்ளார். பின்னர், நேற்று காலை 7 மணியளவில் சதீஷின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து கரும்புகை வெளியானது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், மாடியில் உறங்கிக் கொண்டிருந்த சதீஷ்-க்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சதீஷ் மற்றும் அவரது தாயார் அன்னபூரணி, மகன் தனுஷ், உறவினர் கணேசன் ஆகியோர் எழுந்து, கீழே இறங்கி வருவதற்குள் அந்தக் கட்டிடம் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்ததுடன், ஸ்கூட்டர் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த தீ அருகிலிருந்த கார் மற்றும் குடோனுக்கும் பரவியது. இதனால், வீட்டு மாடியில் இருந்தவர்கள் கீழே இறங்கிவர முடியாமல் தவித்தனர். மேலும், அதிகமாக வெளியேறிய புகைமூட்டத்தால் அனைவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் தீயணைப்புப் படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று, அந்தக் கட்டிடத்துக்கு செல்லும் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தவுடன் மாடியில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தவர்களை மீட்டு, கீழே கொண்டுவந்து, சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த தீ விபத்தில் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டீ தூள் பாக்கெட்கள் மற்றும் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், ஒரு கார் உட்பட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT