

திண்டுக்கல்: கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ஆம்னி பேருந்து, திண்டுக்கல் அருகே பழுதானதால் ஓட்டுநர் பேருந்தை விட்டுச் சென்றார். இதனால், 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இரவில் குழந்தைகளுடன் காத்துக் கிடந்து சிரமப்பட்டனர்.
கோவையில் இருந்து நாகர் கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தில் 50-க்கும் மேற் பட்ட பயணிகள் இருந்தனர். ஒட்டன்சத்திரம் அருகே பேருந்து சென்றபோது திடீரென பழுதானது. பேருந்தின் ஓட்டுநர் பழுதை சரி செய்து மீண்டும் இயக்கினார். அடுத்தடுத்து 2 இடங்களில் பேருந்து பழுதானதால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.
பேருந்து ஓட்டுநர் ஒருவழியாக திண்டுக்கல் பேருந்து நிலையம் வரை பழுதான பேருந்தை இயக்கி வந்து பயணிகளை இறங்கச்சொல்லி வேறு பேருந்தில் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். போலீஸார் பேச்சு வார்த்தையில் மெக்கானிக் ஷாப்பில் சரி செய்துவிட்டு எடுத்துச் செல்வதாக கூறிவிட்டு சென்ற ஓட்டுநர் பழநி சாலையில் ஓரமாக நிறுத்தி விட்டு சென்றுவிட்டார்.
நீண்ட நேரமாக பேருந்து நிர்வாகத்தை பயணிகள் தொடர்பு கொண்டபோதும் பலன் இல்லை. அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணி வரை ஆறு மணி நேரத்துக்கும் மேலாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற் பட்ட பயணிகள் சிரமப்பட்டனர். பின்னர் அருகில் இருந்த அரசு பேருந்து பணிமனைக்குச் சென்று, தங்களுக்கு சிறப்பு பேருந்து ஒன்று ஏற்பாடு செய்து தர வேண்டும் எனக் கூறவே, உடனடியாக ஏற்பாடு செய்து பயணிகளை அனுப்பி வைத்தனர்.