

வத்தலகுண்டு: வத்தலகுண்டு அருகே மது போதையில் தன்னைத் தாக்கிய கணவரை கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே தெற்கு விராலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி வீரையன் (35). வெல்டிங் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அபிராமி(25). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வீரையன் நேற்று இரவு தனது வீட்டின் முன் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
வத்தலகுண்டு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் வீரையனை அவரது மனைவி கொலை செய்தது தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது: வீரையன் தினமும் மது போதையில் வந்து அபிராமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மனைவியையும், குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு குடி போதையில் வந்து அபிராமியை தாக்கியுள்ளார். அபிராமி திருப்பித் தாக்கியதில் வீரையன் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார். அப்போது, அவரை கம்பியால் குத்தி அபிராமி கொலை செய்ததாகத் தெரிய வந்துள்ளது என்று கூறினர்.