

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் ராஜா (45). லால்குடி கிளை சிறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். ஒரு அடிதடி தகராறில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், ராஜாவுக்கும், அவரது தம்பி நிர்மலுக்கும் (40) இடையே சொத்துப் பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக கடந்த 25-ம் தேதி இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் லால்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொற்செழியன் விசாரணை நடத்தி, மனு ரசீது வழங்கியுள்ளார்.
அதன்பின் ராஜா, நிர்மல் இடையே நேற்று முன்தினம் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக லால்குடி காவல் நிலையத்தில் ராஜா மீண்டும் புகார் தர வந்தார். ஆனால் போலீஸார் புகாரை பெற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால், போலீஸார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறி காவல் நிலையம் முன்பு ராஜா தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீஸார் வழக்கு பதிந்து நிர்மல், அவரது மனைவி ஜெனிதா ஜாக்குலின் (35) ஆகியோரை கைது செய்தனர். மேலும், ராஜா அளித்த புகாரில் உரிய விசாரணை நடத்தாத உதவி ஆய்வாளர் பொற்சொழியனை பணியிடை நீக்கம் செய்து சரக டிஐஜி சரவணசுந்தர் நேற்று உத்தரவிட்டார்.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.