

கோவை: கோவையில் நீதிமன்ற வளாகத்தில், கணவரால் ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவா என்ற சிவக்குமார் (42). ஆம்புலன்ஸ் ஓட்டுநர். இவரது மனைவி கவிதா (35). இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர், மனைவி மீது திருட்டு வழக்குகள் உள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு கோவையில் பேருந்தில் பெண் பயணியிடம் நகை திருடியதாக கவிதா மீது மாநகர போலீஸில் வழக்கு உள்ளது. இவ்வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையே, கவிதா, கடந்த மார்ச் மாதம் வீட்டை விட்டு வெளியேறி மாயமானார். அவரது கணவர் சிவக்குமார் இதுதொடர்பாக சூலூர் போலீஸில் புகார் அளித்தார்.
இச்சூழலில் கவிதா, தனக்கு அறிமுகமான வேறொரு நபருடன் வசித்து வருவதாகவும், மார்ச் 23-ம் தேதி வழக்கு விசாரணைக்காக ஜே.எம்.1 நீதிமன்றத்துக்கு வர உள்ளதாகவும் சிவக்குமாருக்கு தெரிய வந்தது. திருட்டு வழக்கு விசாரணைக்காக கவிதா, கடந்த மார்ச் 23-ம் தேதி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வந்தார்.
அங்கு வந்த சிவக்குமார், கவிதாவை சந்தித்து தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார். கவிதா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் கழிவறை கழுவும் ஆசிட் திரவத்தை எடுத்து கவிதாவின் மீது ஊற்றினார். கவிதாவின் முகத்தின் ஒரு பகுதி, உடலின் முன்பகுதியில் ஆசிட் விழுந்தது. அங்கிருந்தவர்கள் கவிதாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆசிட் வீசிய கணவர் சிவக்குமாரை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர். ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த கவிதாவுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒரு சில இடங்களில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கவிதா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.