திருவள்ளூரில் மின்சார வயர்கள் திருட்டு - திமுக இளைஞரணி அமைப்பாளர் உட்பட 6 பேர் கைது
திருவள்ளூர்: திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின்சார வயர்கள் திருடியது தொடர்பாக திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளான ஒதிக்காடு, ஈக்காடு, சித்தம்பாக்கம், கீழானூர், வதட்டூர், ஆயலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2022-ம் ஆண்டு முதல், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின்சார வயர்கள் தொடர்ந்து திருடு போய் வந்தன. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வெங்கல், பென்னலூர்பேட்டை, புல்லரம்பாக்கம் காவல் நிலையங்களில் மின்சார வாரிய அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் எஸ்.பி.சீபாஸ்கல்யாண் உத்தரவின்பேரில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் ஈக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த திருட்டு தொடர்பாக திருவள்ளூர் அருகே உள்ள ஒதிக்காடு பகுதியைச் சேர்ந்த, திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் அலெக்ஸ் என்கிற அலெக்சாண்டர், அவரது நண்பர்களான ஒதிக்காடு சூர்யா,சுனில், பிரவீன் குமார், சித்தம்பாக்கம் சரத்குமார், முகேஷ் ஆகிய 6 பேரை வெங்கல் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 2.600 டன் மின் வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
