Published : 30 Apr 2023 04:17 AM
Last Updated : 30 Apr 2023 04:17 AM
சென்னை: சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகர், 5-வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (42). இவர் கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார்.
இவரது நண்பர்கள் மூலம் கடந்த 2016-ம் ஆண்டு கே.கே.நகரை சேர்ந்த பாலாஜி (60) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அப்போது பாலாஜி சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் உதவி ஆணையராக இருப்பதாக கூறியுள்ளார். தனக்கு உயர் அதிகாரிகள் பலரையும் தெரியும் என்று விஜயகுமாரை நம்ப வைத்துள்ளார்.
இந்நிலையில் விஜயகுமார் தனது தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்று வங்கியில் கடன் வாங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட பாலாஜி தனக்கு வங்கி உயர் அதிகாரிகளை தெரியும் என்றும் கடன் வாங்கி தருவதாகவும் கூறி விஜயகுமாரிடம் கடந்த 2016 முதல் 2022 வரை ரூ.10 லட்சம் வரை பணம் வாங்கி ஏமாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் என்ஐஏ அதிகாரியாக பதவி உயர்வு கிடைத்து டெல்லிக்கு செல்ல இருப்பதாக பாலாஜி கூறியுள்ளார். இதனால் கொடுத்த பணத்தை விஜயகுமார் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதுடன் விஜயகுமாரை துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று கூறி மிரட்டினாராம்.
அத்துடன் துப்பாக்கி மற்றும் லத்தியை காட்டி அவரை பயமுறுத்தி உள்ளார். இதனால் பயந்துபோன விஜயகுமார் ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் பாலாஜியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT