

சென்னை: கிருஷ்ணகிரி ஜெகன் கொலை வழக்கில் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த இருவரை, ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரியை அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்த டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி ஜெகன் இவர் அவதானப்பட்டியை அடுத்த புழுக்கான் கொட்டாயை சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யாவை காதலித்து வந்தார். இருவரும் உறவினர்கள். இந்த காதலுக்கு சரண்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை மீறி சரண்யா கடந்த ஜனவரி 26-ம் தேதி ஜெகனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த மார்ச் 21-ம் தேதி அவரது மாமனார் சங்கர் உட்பட சிலர் சேர்ந்து கிருஷ்ணகிரி அணை பிரிவு சாலையில் ஜெகனை வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
நீதிமன்ற காவலில் உள்ளவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, நீதிமன்ற காவல் நிறைவடைவதற்கு முன்பாக காவல் துறை மனு தாக்கல் செய்தது. ஆனால் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நிறைவடைந்துவிட்டதால் போலீஸ் காவலுக்கு அனுமதிக்க முடியாது எனக் கூறி காவல் துறையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து காவல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்தச் சம்பவத்தில் முதல் குற்றவாளியான தந்தையிடம் காவல் துறையினர் ஏற்கெனவே விசாரணை நடத்திவிட்டதால், மற்ற இருவரிடமும் விசாரணை நடத்த தேவையில்லை" என்று தெரிவித்தார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், "15 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிவடைவதற்கு முன்பே போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உத்தரவு பிறப்பிப்பதில் நீதிபதி காலதாமதம் செய்துவிட்டார். குற்றத்தின் தன்மையைக் கருதி மனு தாக்கல் செய்த அன்றைய தினமே மனு மீது முடிவெடுத்திருக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
இதையடுத்து காவல் துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சரணடைந்த குற்றவாளிகள் இருவரையும் ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு அனுமதி வழங்குமாறு கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.