சென்னை | தொழில் போட்டியில் விசிக பிரமுகர் கொலை: ரியல் எஸ்டேட் அதிபர், மனைவி உட்பட 8 பேர் கைது

சென்னை | தொழில் போட்டியில் விசிக பிரமுகர் கொலை: ரியல் எஸ்டேட் அதிபர், மனைவி உட்பட 8 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: தொழில் போட்டி காரணமாக விசிக பிரமுகர் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ரியல்எஸ்டேட் அதிபர், அவரது மனைவிஉட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, கே.கே.நகர், அம்பேத்கர் குடிசை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற முண்டக்குட்டி ரமேஷ் (38). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருகை தொகுதி நிர்வாகியாக இருந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். மேலும் ரவுடிகளுக்கான பட்டியலில் `ஏ' பிரிவில் போலீஸாரால் வைக்கப்பட்டிருந்தார். இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருந்தன.

இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் காரில் வந்த கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து எம்ஜிஆர் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் துப்பு துலக்கினர். அதன்படி, ரமேஷ் கொலை தொடர்பாக எம்ஜிஆர் நகர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த ராகேஷ் (34), அவரது மனைவி ஷோபனா (33), சென்னை வால்டாக்ஸ் சாலை தனசேகரன் (42), மேற்கு தாம்பரம் மோகன்ராஜ் (37),திருப்பூர் தினேஷ்ராஜன் (24), மீனம்பாக்கம் செந்தில்குமார் (30), கோடம்பாக்கம் காமராஜ் காலனி உதயகுமார்(40), கே.கே.நகர் தீபன்(32) ஆகிய8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலைக்கான காரணம்: இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட ராகேஷ், கொலையுண்ட ரமேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். கடந்தசில ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்து தனியாகத் தொழில் செய்துள்ளனர்.

இதில், இருவருக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துள்ளனர். ராகேஷ் முந்திக்கொண்டு ரமேஷை மனைவி, கூட்டாளிகளுடன் சேர்ந்துதீர்த்துக் கட்டியுள்ளார். தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாகவே இந்த கொலை நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in