

கோவை: கோவையை சேர்ந்த பெண், மன நலம் பாதிக்கப்பட்ட தனது சகோதரர்கள் இருவரையும் கவனித்து வந்துள்ளார். அந்த பெண்ணின் தந்தையின் நண்பர், மனநல பாதிப்புக்கு பரிகார பூஜை செய்தால் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு தெரிந்த திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையை சேர்ந்த பாபு (40) என்பவர் பரிகார பூஜை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 2021 மார்ச் 12-ம் தேதி, பாபு அந்த பெண்ணின் சகோதரர்களுக்கு பூஜை செய்துள்ளார். பிறகு பெண்ணுக்கு 37 வயதாகியும் திருமணமாகாததை கூறி, அந்த பெண்ணுடன் தனிமையில் பரிகார பூஜையை செய்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் அந்த பெண்ணின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை கண்ட பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது, பரிகார பூஜையின்போது பாபு தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகவும், அதனை வெளியில் கூறினால் பெற்றோர் உயிரிழந்துவிடுவார்கள் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
புகாரின்பேரில், கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாபுவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, பாபுவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஜிஷா ஆஜரானார்.