

கடலூர்: மழலையர் பள்ளிச் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கைதாகி சிறையில் இருக்கும் பள்ளி தாளாளர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி (62). இவர், அங்குள்ள சக்தி நகரில் நர்சரி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு திமுக கவுன்சிலராகவும் இருந்து வந்தார். இவர், அவரது பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பள்ளிக்கு சென்ற சிறுமி அழுது கொண்டே வந்து இச்சம்பவம் பற்றி பெற்றோரிடம் கூற, விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிறுமியிடம் குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும மகளிர் போலீஸார் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, பள்ளி தாளாளர் பக்கிரிசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து பக்கிரிசாமி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், பள்ளி தாளாளர் பக்கிரிசாமியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இந்தப் பரிந்துரையை ஏற்ற ஆட்சியர், பக்கிரிசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் இருக்கும் பக்கிரிசாமி யிடம் இதற்கான உத்தரவு நகலை போலீஸார் நேற்று வழங்கினார். பள்ளி தாளாளர் பக்கிரிசாமியை ஏற்கெனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தனர்.