

உதகை: உதகை அருகே பழங்குடியின மாணவியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை பகுதியை சேர்ந்த 14 வயதான தோடர் பழங்குடியின மாணவி, அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது இறுதித் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இரவில் அங்கர்போர்டு அருகே புதருக்குள் பலத்த காயங்களுடன் மாணவி இறந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலின்பேரில் பைக்காரா காவல் நிலைய போலீஸார் சென்று விசாரித்தனர். மாணவி உடல் அருகே ஒரு கார் நின்றிருந்தது. மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர்.
மக்கள் போராட்டம்: ஆனால், மாணவியை கொன்ற நபர்களை கைது செய்யும் வரை உடலை எடுக்கவிடமாட்டோம் என தெரிவித்து, உறவினர்களும், பொதுமக்களும் உதகை - கூடலூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்தனர். இதையடுத்து, மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது: மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் உறுதியாக கூற முடியும். மாணவியை கடத்திச் சென்ற கார், கக்கோடுமந்து பகுதி சேர்ந்த ரஜ்னேஷ் குட்டன்(25) என்பவருக்கு சொந்தமானது. சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போக்சோ, கடத்தல், கொலை உள்ளிட்டபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரஜ்னேஷ் குட்டன் நேற்று கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா எனவும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.