

கோவை: கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள் கார்த்திக், முருகேசன். இருவரும் ஒரு தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தனர்.
அங்கு பணியாற்றும் ஒரு தொழிலாளியின் 5 வயது மகளுக்கு பிஸ்கெட் வாங்கித் தருவதாக கூறி, 2019 அக்டோபர் 14-ம் தேதி கார்த்திக் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு முருகேசன் உடந்தையாக இருந்துள்ளார். பின்னர், இருவரும் சிறுமியை வீட்டில் கொண்டு போய் விட்டனர்.
சிறுமி தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அந்த சிறுமி அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், முருகேசன் ஆகியோரை கைது செய்தனர்.
கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. கார்த்திக், முருகேசன் ஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜி.குலசேகரன் உத்தரவிட்டார்.