Published : 26 Apr 2023 06:49 AM
Last Updated : 26 Apr 2023 06:49 AM

“சரியான வேலை இல்லாததால் கடனாளியாகி விட்டேன்; வீட்டில் தனியாக இருந்த 2 மூதாட்டிகளை பணம், நகைக்காக கொலை செய்தேன்” - சென்னையில் கைதானவர் வாக்குமூலம்

பழவந்தாங்கல் பகுதியில் குடியிருப்பில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 60 பவுன் நகை, ரொக்கத்தை பார்வையிடும் தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை ஆணையர் சிபி சக்ரவர்த்தி, துணை ஆணையர் தீபக் சிவாச் மற்றும் தனிப்படையினர்.

சென்னை: பழவந்தாங்கல் பகுதியில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கொலையாளி, நகை, பணத்துக்காக 2 மூதாட்டிகளை கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை பழவந்தாங்கல், தில்லை கங்கா நகரைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி (81) என்ற மூதாட்டிகடந்த 21-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிலிருந்த 45 பவுன் நகை, ரூ.2 லட்சம்ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆதம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிந்து கொலை, கொள்ளை தொடர்பாக கே.கே.நகர், பாரதிதாசன் காலனியை சேர்ந்த சக்திவேல் (45) என்பவரை 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்வழக்கில் கைதான சக்திவேல் அளித்துள்ள வாக்குமூலம்:

எனது தந்தை அஞ்சல் துறையில் அதிகாரியாக பணியாற்றிஓய்வு பெற்றவர். பாகப்பிரிவினையில் எனக்கு உரிய பங்குதராததால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினேன். சென்னைபல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் எம்பிஏ படித்தேன். அதை தொடர முடிய வில்லை. ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தேன். எனக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சிவகாமி சுந்தரி, சீதா லட் சுமி

4 நாட்களாக நோட்டம்: வீட்டு உள் அலங்காரம் செய்யும் பணி செய்து வந்தேன். கரோனாவுக்குப் பிறகு குடும்பம் நடத்த வருமானம் கிடைக்காததால், பலரிடம் கடன் வாங்கினேன். இந்நிலையில்தான் சில தினங்களுக்கு முன் ஆதம்பாக்கம் தில்லை கங்காநகருக்கு வேலைக்காக சென்றேன்.அப்போது, முகவரி தெரியாமல் மூதாட்டி சிவகாமி சுந்தரி (கொலை செய்யப்பட்டவர்) இருந்த தெருவுக்கு சென்றேன். அவரிடம் சென்று முகவரி கேட்டேன்.

அப்போதுதான் அவரது மகனும், மருமகளும் காலையில் பணிக்கு சென்றுவீட்டு இரவில்தான் வீடு திரும்புவார்கள் என்று தகவல் கிடைத்தது. எனவே, சிவகாமி சுந்தரி தனியாக இருப்பதை தெரிந்துகொண்டு அவரை கொலை செய்து கொள்ளையடிக்க திட்டமிட்டேன்.

தொடர்ந்து 4 நாட்கள் அதே பகுதியில் சுற்றித் திரிந்தேன். அப்போது, பணிப்பெண் காலையில் பணிக்கு வரும்போது சிவகாமி சுந்தரி கதவை திறந்து விடுவதும், அவர் திரும்பி செல்லும்போது கதவை மீண்டும் பூட்டுவதும் தெரிந்தது.

அதன்படி சம்பவத்தன்று பணிப்பெண் உள்ளே செல்ல கதவை திறந்து வைத்தபோது நான் நைசாகஉள்ளே சென்று வீட்டு படிக்கட்டில் பதுங்கினேன். பணிப்பெண் சென்றபிறகு கதவை சிவகாமி சுந்தரி உள் பக்கமாக பூட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைந்த போது தயாராக நின்றிருந்த நான் அவர் மீது தாக்குதல் நடத்தி நிலைகுலைய செய்தேன்.

பின்னர் தலையணையால் அமுக்கி கொலை செய்தேன். பின்னர், அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்தேன். சிசிடிவி கேமராக்களில் சிக்காமல் இருக்க குடைபிடித்தபடி அங்கிருந்து நழுவினேன். செல்போன் சிக்னல் மூலம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக போனை எடுத்து செல்லவில்லை.

கைதான சக்திவேல்

கொலை, கொள்ளையில் ஈடுபட்டுவிட்டு ஆட்டோவில் ஏறி திருவல்லிக்கேணியில், நான்குடியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் வாடகை பாக்கி பணம் ரூ.70 ஆயிரத்தை கொடுத்தேன்.

போலீஸாரை திசை திருப்ப ஆட்டோவில் மாறி மாறி பயணம் செய்தேன். உறவினர்களிடம் வாங்கி கடனை திருப்பினேன். அடகு வைத்த மனைவியின் நகையையும் மீட்டேன். சரியான வேலை இல்லாமல் கடனாகி விட்டதால் குடும்பம் நடத்த பணம் இல்லாததால் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டியை குறி வைத்து கொலை செய்து கொள்ளையடித்ததாக சக்திவேல் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மற்றொரு கொலை: மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் இதேபோல், 2021-ம் ஆண்டு தனது வீட்டருகே (100 மீட்டர் தூரம்) தனியாக இருந்த சீதாலட்சுமி (70)என்பவரையும் கொலை செய்து19 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில், கொலையாளி சக்திவேலை கைது செய்தது எப்படி? என காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறியதாவது:

சக்திவேல் சிவகாமி சுந்தரியைகொலை செய்து விட்டு குடைபிடித்தபடி முகத்தை மறைத்து சென்றார். சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்தபோது ஆண் ஒருவர் குடைபிடித்து சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, அவர் சென்ற வழிகளில் உள்ள சிசிடிவிகேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் கடைசியாக திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டுக்குள் சென்றார். அந்த வீடு சக்திவேல் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் என தெரிந்தது.

அவர் கொடுத்த தகவலின்பேரில் சக்திவேலை பிடித்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். வேறு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என விசாரிக்க அவரை காவலில் எடுக்க உள்ளோம்’ என்றார்.

இதற்கிடையில் கொலை வழக்கில் துப்புதுலக்கிய தனிப்படை போலீஸாரை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டி வெகுமதி அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x