Published : 26 Apr 2023 07:43 AM
Last Updated : 26 Apr 2023 07:43 AM
சென்னை: சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி சீனிவாசன். இவர், உடல்நலம் குன்றிய தனது தாயாரை பார்க்க வீட்டை பூட்டிவிட்டு கடந்த 12-ம் தேதி வெளியூர் சென்றார். இதை நோட்டமிட்டு வீடு புகுந்த கொள்ளையன் அங்கிருந்த 120 சவரன் நகையை கொள்ளையடித்து தப்பினார்.
இதுகுறித்து அடையாறு துணை ஆணையர் மகேந்திரன், உதவி ஆணையர் கிறிஸ்டின் ஜெயசில் மேற்பார்வையில் குமரன்நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் மணிமாலா வழக்குப் பதிந்து விசாரித்தார்.
இதில், நகை கொள்ளையில் ஈடுபட்டது வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் வசிக்கும் ஆங்கிலோ இந்தியரான ஆரிப் பிலிப்ஸ் (58) என்பது தெரிந்தது. அவரை போலீஸார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர். அவரிடமிருந்து 85 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது. அவரை போலீஸார் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கைது செய்யப்பட்ட ஆரிப் பிலிப்ஸ் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். இவர் மீது சென்னையில் கே.கே.நகர், கோடம்பாக்கம், குமரன் நகர் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்ட இவர், இப்படி 25 ஆண்டுகளாக கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியான சீனிவாசன் வீட்டில் திருட்டு நிகழ்ந்தபோது மோப்ப நாயை வரவழைத்து சோதனை செய்தோம். அருகில் கட்டுமான பணி நடைபெற்றுவரும் கட்டிடம் அருகே பதிவான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து அவரை கைது செய்தோம்.
உண்மையை ஒப்புக்கொண்ட அவர் கொள்ளையடித்த நகைகளை அயனாவரத்தில் உள்ள இரண்டாவது மனைவி வீட்டில் பதுங்கி வைத்திருந்தபோது அதை பறிமுதல் செய்தோம். இந்த தகவல்கள் அனைத்தையும் வாக்குமூலமாக ஆரிப் பிலிப்ஸ் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT