

மதுரை: மதுரையில் லாட்டரி வியாபாரி மீது கஞ்சா வழக்கு பதிவு செய்தது தொடர்பாக தென் மண்டல ஐஜி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த ஜாமீன் மனு: என் மீது லாட்டரி விற்றதாக போலீஸார் 17 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். கடந்த ஏப்.17-ல் எஸ்.எஸ்.காலனி போலீஸார் எனது அலுவலகம் வந்து நான் வைத்திருந்த ரூ.4 லட்சத்தை எடுத்துக் கொண்டு என்னையும் அழைத்துச் சென்றனர். பின்னர் போலீஸார் மீது நான் 2019-ல் அளித்த புகாரை திரும்பப் பெற வேண்டும் என துன்புறுத்தினர்.
அதற்கு மறுத்ததால், 21 கிலோ கஞ்சாவை கடத்தியதாக வழக்குப் பதிந்து என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். என் மீதான கஞ்சா வழக்கு பொய்யானது. இந்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிடுகையில், மனுதாரர் லாட்டரி வியாபாரி. அவர் மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மனுதாரருக்கும், போலீஸாருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.
அதனால் கஞ்சா வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் திலகர்திடல், எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கை தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதி, காவல் நிலைய சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் 15 நாட்கள் பதிவு மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளனர். மனுதாரர் மீது பொய் வழக்கு பதிவு செய்திருப்பது தெரிகிறது. இதனால் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது.
மனுதாரர் மீது பொய் வழக்கு பதிவு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தால் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நட வடிக்கை குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும் என உத்தரவிட்டார்.