Published : 25 Apr 2023 07:16 AM
Last Updated : 25 Apr 2023 07:16 AM

காஞ்சி அண்ணா கல்லூரியில் ரூ.3 கோடி பணமோசடி புகார்: போலீஸார் விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் சுமார் ரூ.3 கோடி மோசடி நடந்துள்ளதாக கூறப்படும் புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரிக்கரை பகுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் உறுப்பு கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபுஎன்பவர் உதவியாளராக பணி செய்து வருகிறார். இவர் கல்லூரியின் வரவு செலவு கணக்கு வழக்குகளை நிர்வகித்து வருவதாக தெரிகிறது.

அரசு நிர்ணயிக்கும் கட்டணம் மட்டுமே இந்தக் கல்லூரியில் வசூலிக்கப்படும். விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளிடம் பெறப்படும் டெபாசிட் பணம் வங்கியில் நிரந்தர வைப்பு நிதி கணக்கில் செலுத்தப்படும். நான்கு வருட படிப்பு முடித்த பிறகு பணம் திரும்பி அளிக்கப்படும்.

இந்நிலையில் பிப்ரவரி மாதமே மாணவர்களிடம் திரும்பி அளிக்க வேண்டிய தொகை கடந்த மாதம் வரை கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகார் வந்ததால் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் நிர்வாகிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது இந்தப் பணம் மோசடியாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. கல்லூரிக்கு சொந்தமான 9 வங்கி கணக்குகள் மற்றும் 7 நிரந்தர வைப்பு வங்கிகணக்குகளை ஆய்வு செய்தபோது அவற்றிலும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரிந்தது. கல்லூரி முதல்வரின் போலி கையெழுத்து மற்றும் போலி லெட்டர் பேட் மூலம் இந்த பணத்தை எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து வங்கி கணக்கு விவரங்களை நிர்வகித்து வரும் ஊழியர் பிரபு மீது சந்தேகம் உள்ளதாக கல்லூரி தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x