

சென்னை: ஆதம்பாக்கத்தில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகை, பணம் கொள்ளை யடித்த வழக்கில் தலைமறைவாக இருந்தநபர் கைது செய்யப்பட்டுஉள்ளார்.
ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் சிவகாம சுந்தரி (81).கணவரை இழந்த இவர், மகன்ராம், மருமகள் பானு ஆகியோருடன் வசித்து வந்தார்.
கடந்த 21-ம் தேதி ஸ்ரீராமும், பானுவும் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினர். அப்போது சிவகாமசுந்தரி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர்அணிந்திருந்த 10 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
வீட்டின் பீரோவில் இருந்த 45பவுன் நகை, ரூ.2.5 லட்சம்ரொக்கமும் கொள்ளை போனது. இது தொடர்பாக ஆதம்பாக்கம் போலீஸார் விசாரணை செய்தனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வுசெய்தனர். அதில், சம்பவத்தன்று ஆட்டோவில் வந்த ஒரு நபர், குடையுடன் சிவகாம சுந்தரி வீட்டுக்குள் சென்று, கைவரிசையை காட்டியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோ வின் பதிவு எண் அடிப்படையில் போலீஸார் துப்பு துலக்கினர். கொலை, கொள்ளையில் ஈடுபட்டது கே.கே. நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (40) என்பதுதெரியவந்தது. தலைமறைவாக இருந்த சக்திவேலை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘வீட்டின் உள்அலங்காரம் வேலை செய்யும்சக்திவேல், கடந்த 2021-ம்ஆண்டு கே.கே.நகரைச்சேர்ந்த மூதாட்டி சீதாலட்சுமிஎன்பவரை நகை, பணத்துக்காக கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர். குடும்பத்துடன் வசிக்கும் சக்திவேலுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது போதிய வருமானம் இல்லாமல் இருந்துள்ளார்.
குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி, வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களை நோட்டமிட்டதில் சிவகாமசுந்தரி சிக்கி உள்ளார்.
அவரிடம் தண்ணீர் கேட்பதுபோல வீட்டுக்குள் நுழைந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, நகை, பணத்தைகொள்ளையடித்து தப்பியுள்ளார். அவரை தற்போது கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடக்கிறது’’ என்றனர்.