

சென்னை: சென்னை, கொருக்குப்பேட்டை, ஆரணி ரங்கன் தெருவைச் சேர்ந்தவர் குமார் என்ற கருப்பு குமார் (52). ரவுடியான இவர் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில், இவர் கடந்த 21-ம் தேதி காலை, வீட்டின்அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் குமாரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியது.
இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக கொலை தொடர்பாக திருமங்கலத்தைச் சேர்ந்த பூபதி (34), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் (23), புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த முரளி என்ற பாக்சர் முரளி (26) ஆகிய 3பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
கொலைக்கான காரணம்: இந்நிலையில், கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் கூறியதாவது: ரவுடி குமார் கொலை வழக்கில் ஆகாஷ் என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரது தந்தை வெங்கடேசன் 2013-ம்ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்ட குமார் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இதனால் தந்தையின் கொலைக்கு பழி வாங்க ஆகாஷ், அவரது உறவினரான பூபதி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து குமாரை திட்டமிட்டு, பின் தொடர்ந்து கொலை செய்துள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள பூபதி கொருக்குப்பேட்டை காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார். இவர் மீது 2 கொலை முயற்சிவழக்குகள் உட்பட 6 குற்றவழக்குகள் உள்ளது. தலைமறைவாக உள்ள ஆகாஷ் உட்பட 3 பேரை தொடர்ந்து தேடி வருகிறோம் என்றனர்.