

தாம்பரம்: சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவர் பெற்றோரை இழந்த நிலையில் தனது பாட்டியுடன் வசித்துவந்தார். பின்னர் தாம்பரம் சானடோரியம் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு அந்தஇளம்பெண்ணுக்கும் கோவில்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணன் முகப்பேர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
பின்னர் கிருஷ்ணனும் இளம்பெண்ணும் காதலித்துள்ளனர். நாளடைவில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கிருஷ்ணனின் தொடர்பை இளம்பெண் துண்டித்தார். அதிலிருந்து கிருஷ்ணன் அந்த பெண்ணுக்கு தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுப்பது, தகாத வார்த்தைகளால் திட்டுவது, மிரட்டுவதுமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த அந்த பெண் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் காவலர்கள் புகாரை வாங்க மறுத்துள்ளதாக தெரிகிறது.
பின்னர் அந்தப் பெண் 1091 என்ற மகளிர் உதவி எண்ணுக்கு போன் செய்துள்ளார். பின்னர் தாம்பரம் மகளிர் போலீஸாரிடம் மீண்டும் புகார் கொடுக்க வந்துள்ளார். அப்போது அவரை தகாதவார்த்தைகளால் காவல் நிலையத்தில் இருந்த அனைவரது முன்னிலையிலும் பெண் காவலர்கள் திட்டியதாக தெரிகிறது.
மேலும் அந்த பெண்ணை தாக்கி அவரது செல்போனை பறித்துவைத்துக் கொண்டு விரட்டி அடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.