Published : 23 Apr 2023 04:03 AM
Last Updated : 23 Apr 2023 04:03 AM
சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு பெண்ணின் வீட்டில் பழங்கால சுவாமி சிலைகள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸார் சோதனை நடத்தி, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 55பழங்கால கற்சிலைகளை கைப்பற்றினர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு அரியலூர்மாவட்டம் செந்துறை அடுத்த வேலூர் கிராமத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் கதவை உடைத்து, வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அனுமன் ஆகிய 4 உலோக சிலைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இது பற்றி சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் அனுமன் சிலை இருப்பது கண்டறியப்பட்டது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் ஏலம் மூலம் அந்த சிலையை வாங்கியது தெரியவந்தது. பின்னர்,மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியுடன் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்த அனுமன் சிலையை தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் மீட்டுள்ளனர்.
இந்நிலையில், 55 பழங்கால கற்சிலைகள், அனுமன் சிலையை டிஜிபி சைலேந்திர பாபு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் கைப்பற்றப்பட்டுள்ள 55 கற்சிலைகளும் தமிழகம், வடமாநிலங்கள் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் திருடப்பட்டவை.
இவை அனைத்தும் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இவை எந்தகோயிலுக்குச் சொந்தமானது என்றுவிசாரித்து வருகிறோம். சில மாதங்களுக்கு முன்பு காலமான சர்வதேச சிலை கடத்தல் குற்றவாளி தீனதயாளனிடம் இருந்து இந்த சிலைகள் வாங்கப்பட்டுள்ளன. அவர் யாரிடம் வாங்கினார் என்று விசாரணை நடக்கிறது.
தமிழகத்தில் புலன் விசாரணையில் உள்ள 301 வழக்குகள், கண்டுபிடிக்கப்படாத நிலையில் உள்ள 101 வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிலைகளா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளில் 306 சிலைகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் உதவியால்64 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் உள்ள 16தமிழக சிலைகள் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படும்.
தமிழக சிலை கடத்தல் தடுப்புபிரிவு கடந்த 1983-ம் ஆண்டு முதல்1,000-க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டுள்ளது. இதில் சில நூறு சிலைகள் சம்பந்தப்பட்ட கோயில்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கைவசம் 1,541 பழமை வாய்ந்த சிலைகள் உள்ளன. இவை அனைத்தும் சிலை பாதுகாப்பு மையத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
249 சிலைகளின் முப்பரிமாண வடிவம் www.tnidols.com என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. மற்ற சிலைகளின் வடிவத்தையும் பதிவேற்றும் பணி நடந்துவருகிறது. மீட்கப்பட்ட அனுமன்சிலை அரியலூர் மாவட்டம் வரதராஜப் பெருமாள் கோயிலில் விரைவில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT