Published : 23 Apr 2023 11:42 AM
Last Updated : 23 Apr 2023 11:42 AM
சென்னை: ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடியில் ஏஜென்ட்களை கண்டறிந்து சொத்துகளை பறிமுதல் செய்ய தீவிரம் காட்டி வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், சென்னை அமைந்தகரையை சேர்ந்த செந்தில், மைக்கேல் ராஜ், ராஜசேகர், காஞ்சிபுரத்தை சேர்ந்த ரூசோ, பாஜக நிர்வாகி ஹரீஷ் உள்ளிட்ட 13 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், தலைமறைவாக இருக்கும் பலரை தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மோசடி செய்த பணத்தில் வாங்கப்பட்டுள்ள சொத்துகள், ஆவணங்கள், நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ரூ.100 கோடி மதிப்பிலான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மோசடி விவகாரத்தில் ரூ.6 கோடி பணம், 4 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கைதானவர்களிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள 130 சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ஏஜென்ட்களின் பங்கு அதிகம் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், அவர்களை கண்டறிந்து, அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்யும் பணிகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இறங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT