

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த வட நெம்மேலியை சேர்ந்தவர் வனமுத்து. இவரது, வீட்டின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு கிருஷ்ணன் காரணையில் கழிவுநீர் லாரி வைத்திருக்கும் யுவராஜ் என்பவரை வரவழைத்தார்.
இதன்படி கடந்த 19-ந் தேதி இரவு கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது, உதவிக்கு புதிய கல்பாக்கத்தில் இருந்து அண்ணாமலை (36), மணி(32) ஆகியோரை வீட்டின் உரிமையாளர் வனமுத்து அழைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
ஆனால் இருவரும் நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்து தொட்டிக்குள் எட்டிப் பார்த்த போது இருவரும் விஷவாயு தாக்கி மயக்க மடைந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியோடு அவர்களை மீட்டு திருப்போரூர் அடுத்த அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மணி சாதாரண வார்டிலும் அண்ணாமலை தீவிர சிகிச்சைப் பிரிவிலும் சேர்க்கப்பட்டனர்.
அங்கு, 3 நாட்களாக தீவிரசிகிச்சை பெற்று வந்த அண்ணாமலை சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் வனமுத்து, கழிவுநீர் லாரி உரிமையாளர் யுவராஜ், செம்பாக்கத்தை சேர்ந்தலாரி டிரைவர் குப்பன் ஆகியோரை மாமல்லபுரம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.