

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தாய் மற்றும் இரு குழந்தைகளை கொலை செய்த வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரிமேடு பகுதியில் வசித்து வந்த வளர்மதி, அவரது 11 வயது மகன் மற்றும் 10 மாத குழந்தை ஆகிய 3 பேர் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால் தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், கொலையான வளர்மதியின் சித்தி உறவு முறையான அஞ்சலை (எ) விமலா என்பவருக்கும், வளர்மதிக்கும் இடையே வீட்டுமனை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினையால், செங்குறிச்சியைச் சேர்ந்த அஞ்சலை (எ) விமலா (50), பாசார் கிரமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் (27), பூபாலன் (30), சிவா (39) மற்றும் நாகப்பட்டினம் கடலங்குடியைச் சேர்ந்த ராமு (24) ஆகியோர் சேர்ந்து கடந்த 17-ம் தேதி இரவு வளர்மதியின் வீட்டிற்குள் புகுந்து வளர்மதியின் முதுகில் கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தனர்.
தூங்கி கொண்டிருந்த அவரது குழந்தைகளையும் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தடயங் களை அழித்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் தனிப்படையினர் கைது செய்தனர்.