Last Updated : 20 Apr, 2023 03:28 PM

1  

Published : 20 Apr 2023 03:28 PM
Last Updated : 20 Apr 2023 03:28 PM

கள்ளக்குறிச்சி அருகே தாய், இரு குழந்தைகள் கொடூரக் கொலை - 7 தனிப்படை தீவிர விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே நேற்று இரவு தாய் மற்றும் இரு குழந்தைகள் கழுத்தறுத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 தனிப்படை அமைத்திருப்பதாகவும், குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும் விழுப்புரம் சரக பொறுப்பு டிஐஜி பகலவன் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சியை அடுத்த நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது முதல் மனைவி பானுமதி. பானுமதியோடு கருத்து வேறுபாடு காரணமாக விருத்தாசலத்தை அடுத்த பாலக்கொல்லைக் கிராமத்தைச் சேர்ந்த வளர்மதி (35) என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டு, அவருடன் கள்ளக்குறிச்சியை அடுத்த நரிமேடு பகுதியில் வசித்து வந்துள்ளார். இதனால் வளர்மதிக்கு 11 வயது மகனும், 8 மாத கைக் குழந்தையும் இருந்து வந்த நிலையில், கணவர் மணிகண்டன் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, வளர்மதி தனது மூத்த மகன் தமிழரசன் (11), 8 மாத கைக்குழந்தை கேசவன் ஆகியோருடன் தனியாக வீட்டில் வசித்துவந்தார்.

கணவரை இழந்ததால் குடும்பப் பொறுப்பை ஏற்ற வளர்மதி ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்துவந்தார். இந்த நிலையில் நேற்று வளர்மதி வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. வளர்மதியின் வீடும் திறக்கப்படாமலேயே இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அங்கு விரைந்த போலீஸார், வளர்மதியின் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, வளர்மதி மற்றும் அவரது இரு மகன்கள் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளனர். மேலும் வளர்மதி வளர்த்த கன்றுக்குட்டி கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தது. 10 கோழிக் குஞ்சுகள் வாளி தண்ணீருக்குள் மூழ்கடித்து சாகடிக்கப்பட்டு கிடந்தது. நாய் கட்டப்பட்டும், பசு மாடு உயிருடனும் இருந்தது.

தகவலறிந்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி மோகன்ராஜ் சம்பவ இடத்துக்குச் சென்ற நிலையில், அந்த சடலங்களை மீட்ட போலீஸார், உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அதில் கொலையான வளர்மதி, மணிகண்டனோடு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பாலக்கொல்லையில் இருந்து பிழைப்புக்காக கள்ளக்குறிச்சி ஏமப்பேர் நரிமேட்டில் வீட்டுமனை வாங்கி, அதில் வீடு கட்டி குடியிருந்தது தெரிய வந்தது. இந்த வீட்டு மனை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஒருவருடன் வளர்மதிக்கு பிரச்சினை இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

வளர்மதி

மேலும், வளர்மதியுடன் சேர்ந்து வியாபாரம் செய்த டிரைவரும், கடந்த 3 நாட்களாக வரவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ள போலீஸார், இறந்து போன மணிகண்டனின் முதல் மனைவி பானுமதி மற்றும் வளர்மதியின் தங்கை வனிதா ஆகியோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இன்று அதிகாலை மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, உயிரிழந்த வளர்மதி வீட்டிலிருந்து மேற்கு திசை காரனூர் சாலை பகுதி சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடியது. எனவே குற்றவாளிகள் அந்த வழியாக தப்பி சென்று இருக்கலாம் என கோணத்தில் போலீஸார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். இருப்பினும் கொலைக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை என்றனர்.

இந்த நிலையில் விழுப்புரம் சரக பொறுப்பு டிஐஜி பகலவன் சம்பவ இடத்தில் இன்று விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ''கொலைக் குற்றத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படும் நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் குற்றவாளியை பிடிக்க டிஎஸ்பிகள் பாலசுப்பிரமணியன், திருவேணி தலைமையில் 7 தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டு குற்றவாளி பிடிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. குற்றவாளிகளையும் நெருங்கிவிட்டோம், ஓரிரு நாளில் அவர்களை பிடித்து விடுவோம்'' என்றார். இந்த நிலையில் தான் வனிதாவின் கணவர் ரஜினிகுமார் என்பவரை பிடிக்க தனிப்படை போலீஸார் சென்னை விரைந்துள்ளதாகவும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x