விபத்தில் முடிந்த சாகச பயணம் கிருஷ்ணகிரி அருகே 2 பேர் உயிரிழப்பு

விபத்தில் முடிந்த சாகச பயணம் கிருஷ்ணகிரி அருகே 2 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாகச (வீலிங்) பயணம் சென்ற இருசக்கர வாகனங்கள் மோதியதில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் காயம் அடைந்தார்.

ஓசூர் அருகே மத்திகிரியைச் சேர்ந்தவர்கள் சபரி (20), தவ்பிக் கான் (23) மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு சர்ஜாபுராவைச் சேர்ந்தவர் ஸ்ரீஹர்ஷா (27). நண்பர்களான இவர்கள் மேலும் சில நண்பர்களுடன் 5 இருசக்கர வாகனங்களில் நேற்று அதிகாலை ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்தனர்.

அப்போது, இவர்களுக்கு இடையே இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தைத் தூக்கியபடி (வீலிங்) அதிக தூரம் யார் ஓட்டுவது என போட்டி ஏற்பட்டுள்ளது. 5 வாகனத்தில் வந்தவர்களும் சாலையில் ‘வீலிங்’ செய்தபடி அதிவேகத்தில் வந்தனர்.

ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பந்தாரப்பள்ளி அருகே வந்தபோது, அவர்கள் வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதின. இதில், படுகாயம் அடைந்த சபரி, ஸ்ரீஹர்ஷா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த குருபரப்பள்ளி போலீஸார் இருவரின் சடலத்தை மீட்டனர். மேலும், படுகாயமடைந்த தவ்பிக் கானை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக குருபரப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in