

கரூர்: குளித்தலை அருகே உறவினர் காதல் விவகாரத்தில் மாணவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அய்யர்மலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உட்பட 4 பேரை குளித்தலை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கணக்கபிள்ளையூரை சேர்ந்தவர் மோகன். இவர் மகன் விக்னேஷ் (16). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஐடிஐ-யில் முதலாமாண்டு படித்து வந்தார். இவரது உறவுக்கார சகோதரர் குரு பிரகாஷ் (19). இவர் அய்யர்மலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் அய்யர்மலையை சேர்ந்த மாணவி ஒருவரும் படித்து வருகிறார். அம்மாணவியும், குருபிரகாஷும் 9-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக இருவரும் பேசுவதை நிறுத்திக் கொண்டனர்.
இந்த நிலையில், நாமக்கல்லில் படிக்கும் தனது தோழிக்கு குருபிரகாஷ் போன் செய்துள்ளார். அப்போது அய்யர்மலை மாணவி பெயரையும், அம்மாணவி பெயரையும் ஓரே பேரில் போனில் சேமித்து வைத்திருந்ததால் குழப்பம் ஏற்பட்டு அய்யர்மலை மாணவிக்கு போன் சென்றுவிட்டது. கடந்த சில மாதங்களாக பேசாமல் இருந்த நிலையில், தற்போது போனில் குருபிரகாஷ் பேசியதை அவர் கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டார்.
உடனே அம்மாணவி தன்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்து தற்போது திருச்சியில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் கீழகுட்டப்பட்டியைச் சேர்ந்த அருண் (20), அதே கல்லூரியில் படிக்கும் அவரது நண்பர்கள் கண்டியூரை சேர்ந்த விஜய் (21), கீழகுட்டப்பட்டியைச் சேர்ந்த சரவணன் (21), லாலாபேட்டை அருகேயுள்ள வீரக்குமரன்பட்டியை சேர்ந்த செல்லத்துரை (21) ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அய்யர்மலை பேருந்து நிறுத்தம் அருகே குருபிரகாஷ், விக்னேஷுடன் நேற்று நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த அருண், விஜய், சரவணன், செல்லத்துரை ஆகியோர் குருபிரகாஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில் விக்னேஷ் தலையில் கட்டையால் தாக்கியதில் காயம் ஏற்பட்டது.
குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விக்னேஷ், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இது குறித்து குளித்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து அருண், விஜய், சரவணன், செல்லத்துரை ஆகிய 4 பேரை இன்று (ஏப்.19) கைது செய்தனர். மேலும் அவர்களிடன் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.