

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த மலாலிநத்தம் கிராமத்தில் வினாயகமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தளம் போட்ட வீட்டுடன் கூடிய இடத்தைஜெசிமா என்பவர் 2 ஆண்டுகளுக்கு வாங்கினார். வீட்டை விற்ற விநாயக மூர்த்தி வீட்டினுள்உள்ள பொருட்களை எடுக்காமல் வீட்டிலேயே போட்டு வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று விநாயகமூர்த்தியின் தாயார் சந்திரா முன்னிலையில் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து மூட்டை கட்டிவெளியே எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டினுள் ஒரு கவரில் பழைய நாட்டு கைத்துப்பாக்கியும் 3 தோட்டக்களும் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதனை தொடர்ந்து ஜெசிமா செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் (பொறுப்பு) விஜயலக்ஷ்மி உடனடியாக திருக்கழுகுன்றம் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்து கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் ஜெசிமா வாங்கிய வீட்டுக்கு வந்தார்.
பின்னர் மேற்படி பழைய நாட்டு கைத்துப்பாக்கி மற்றும் 3 தோட்டாக்களை கைப்பற்றி வீட்டின் முன்னாள் உரிமையாளர் வினாயகமூர்த்தி மற்றும் அவரது நண்பர் பிரபு ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிந்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கி சில ஆண்டுகளுக்கு முன்பு கீழே கிடைத்ததாகவும் அதனை வீட்டில் வைத்திருந்ததாகவும் போலீஸாரிடம் கைது செய்யப்பட்ட விநாயகமூர்த்தி, பிரபு தெரிவித்தனர். துப்பாக்கி கிடைத்தவுடன் காவல்துறையிடமும் அல்லது வருவாய் துறையிடமும் ஒப்படைத்திருக்க வேண்டும் அதனை மீறி வீட்டில் வைத்திருந்ததால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என போலீஸார் தெரிவித்தனர்.