

தருமபுரி: பாலக்கோடு அருகே மீன் பிடித்த போது ஏரியில் தவறி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
பாலக்கோடு தீர்த்தகிரி நகரைச் சேர்ந்தவர் சுதா. இவருக்கு 2 மகள்கள். இரண்டாவது மகள் ராகவி (19) தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்ஸி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறையில் இருந்த ராகவி, பாலக்கோடு அடுத்த ஜெ.பந்தாரஅள்ளியில் உள்ள தாத்தா அண்ணாமலை வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார்.
அங்கு, அதே ஊரைச் சேர்ந்த சிறுவர், சிறுமியருடன் இணைந்து சின்னகோடிக்கான அள்ளி ஏரியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி ராகவி ஏரிக்குள் விழுந்துள்ளார். தகவல் அறிந்த அப்பகுதியினர் விரைந்து வந்து ராகவியை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், ராகவி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக மகேந்திரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.