

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பில்லூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கலுவு (80). சலூன் கடை நடத்திவரும் இவர். தனது மனைவிமணியம்மாளுடன் தனியாக வசித்து வந்தார். இந்த தம்பதிக்குசெல்வம், அய்யனார், முருகன் என்ற 3 மகன்களும் சாந்தி என்ற மகளும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தற்போது முருகன் வடலூரிலும், செல்வம், அய்யனார் காடாம்புலியூரிலும், சாந்தி குறிஞ்சிப்பாடியிலும் வசித்து வருகின்றனர்.
பில்லூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்த கலுவு, மணியம்மாள் ஆகியோர் நேற்று முன் தினம் இரவு மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். சடலமாக கிடப்பதைக் கண்ட உறவினர் விஜயா அக்கம்பக்கத்தினரிடம் தெரிவிக்க, இறந்த கலுவுவின் சகோதரர் ராசு விழுப்புரம் தாலுகா போலீஸாருக்கு தகவல்தெரிவித்தார்.
போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த தம்பதியினரின் அருகில் பாதி சாப்பிட்ட நிலையில் பிரியாணி பொட்டலமும், குளிர்பான பாட்டிலும் இருப்பதை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தினர்.
பிரியாணியில் விஷம் கலந்து சாப்பிட்டு முதிய தம்பதி தற்கொலை செய்து கொண்டதாக கருதி போலீஸார் விசாரணையை தொடங்கினர். ஆனால் போலீஸார் நடத்திய விசாரணையில் நேற்று மாலை முதிய தம்பதியின் பேரனான முருகன் மகன் அருள் சக்தி (19) வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.
அருள் சக்தியை செல்போன் மூலம் போலீஸார் தொடர்பு கொண்டனர். ஆனால் அந்த செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த போலீஸார் தொடர்ந்துவிசாரணை மேற்கொண்டுள்ளனர்.