

கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து பசுபதிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்து வடக்கு புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணசாமி (70). விவசாயியான இவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கருப்பண்ணசாமி கடந்த 13-ம் தேதி சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி லட்சுமி உடனிருந்து கவனித்துக் கொண்டுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரகத் தொற்று இருப்பதை கண்டறிந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். காய்ச்சல் மற்றும் தீராத வலியால் அவதிப்பட்ட கருப்பண்ணசாமி இன்று (ஏப்.17) அதிகாலை 5.20 மணியளவில் யாரும் கவனிக்காத நேரத்தில் மருத்துவமனை படுக்கையிலேயே பிளேடால் அவரது கழுத்தை அறுத்துக் கொண்டார். இதில் அதிகளவில் ரத்தம் வெளியேறி உயிரிழந்தார்.
மருத்துவமனை படுக்கையிலே நோயாளி கழுத்தை அறுத்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தால் சக நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கருப்பண்ணசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம். |