

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதி ஒன்று தங்களைத் தாங்களே நரபலிக்கு உட்படுத்திக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில், "ராஜ்கோட் மாவட்டம் விஞ்சியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமுபாய் பக்வானா (38). இவரது மனைவி ஹன்சாபென் (35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் நரபலி பூஜை செய்ய ஆயத்தமாகியுள்ளனர். இதற்காக வீட்டிலேயே ஆயுதம் தயார் செய்துள்ளனர். இதற்காக, கில்லட்டின் மாதிரியிலான இரும்பு ப்ளேட் கொண்ட ஓர் இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.
சம்பவத்தன்று இருவரும் பூஜைகள் செய்துவிட்டு தாங்கள் வளர்த்த வேள்வியின் முன்னால் இருந்த கில்லட்டின் இயந்திரத்தில் தலையைப் பொருத்திக் கொண்டு கயிற்றை நீக்கி ப்ளேடை கீழே விழச் செய்துள்ளனர். இதனால் அவர்கள் எதிர்பார்த்தபடியே இரும்பு ப்ளேட் அவர்கள் தலையை வெட்ட தலை துண்டாகி தீயில் விழுந்துள்ளது. நரபலியை இப்படித்தான் செய்து கொள்ளப்போவதாக தற்கொலைக் குறிப்பில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தங்கள் குழந்தைகளையும் பெற்றோரையும் உறவினர்கள் பார்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விபத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுவதாக காவல் ஆய்வாளார் இந்திரஜித் சிங் தெரிவித்துள்ளார். அக்கம்பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் இருவருமே கடந்த ஓராண்டாக விநோதமாக பூஜைகளில் ஈடுபட்டுவந்ததாகத் தெரிவித்துள்ளனர்.