

சென்னை: சிறை காவலர்கள் மீது வெளிநாட்டு பெண் கைதிகள் தாக்கிய சம்பவம் புழல் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை மற்றும் மகளிர் என 3 தனித்தனி பிரிவுகளில் சுமார் 3 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில், மகளிர் சிறை பிரிவில் வெளிநாட்டு பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைக்குள் சிலர் செல்போன்கள் மற்றும் போதைப் பொருட்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிறை காவலர்கள் நேற்று முன்தினம் புழல் சிறைக்குள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, உகாண்டா மற்றும் மாலத்தீவைச் சேர்ந்த பெண் கைதிகள் சிறைக்குள் மறைவாக செல்போனை வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை போலீஸார் பறிமுதல் செய்ய முயன்றனர். இதனால், கோபம் அடைந்த இரு வெளிநாட்டு பெண் கைதிகளும் செல்போன்களை தூக்கி எரிந்து உடைத்தனர். மேலும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் ஆண் கைதி ஒருவர் மறைத்து வைத்திருந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இரு சம்பவம் குறித்தும் புழல் காவல் நிலையத்தில் புகார்அளிக்கப்பட்டது. அதன்படி சிறைக்குள் செல்போன் எப்படி சென்றது? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.