பெண் போன்று நடித்து உடற்பயிற்சி ஆலோசனை - பெண்களை ஏமாற்றிய புதுச்சேரி இளைஞர் கைது
புதுச்சேரி: ஆன்லைன் மூலம் உடற்பயிற்சி அளிப்பதாக பெண் போன்று நடித்து, பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரியில் பெண் உடற் பயிற்சி மாஸ்டர் போன்று, இன்ஸ்டா கிராமில் பல்வேறு பெண்களிடம் ஒருவர் பேசி வந்துள்ளார்.
அவர் அந்த பெண்களிடம், "உங்கள் புகைப்படங்களை எனக்கு அனுப்பினால், அதனை பார்த்து உங்களுக்கு தகுந்தாற்போல் உடற்பயிற்சி மேற்கொள்ள ஆலோசனைகூறுவேன்" என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பி பலரும் புகைப்படங்களை அவருக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அவர்,பெண்களுக்கு சில உடற்பயிற்சி களை பரிந்துரை செய்துள்ளார்.
இந்நிலையில் திடீரென அவர், மற்றொரு இன்ஸ்டாகிராம் ஐடி மூலமாக அந்த பெண்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், "ஆடைகள் இல்லாமல் வீடியோ காலில் தன்னுடன் பேச வேண்டும். இல்லையென்றால் அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்துஇணையதளத்தில் வெளியிட்டு விடுவேன்" என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெண்கள் சிலர் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸா ருக்கு அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. ஆன் லைன் மூலம் பெண்களுக்கு உடற்பயிற்சி அளிப்பதாக கூறியவர் பெண் உடற்பயிற்சி மாஸ்டர் இல்லை. அவர் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் திவாகர்(22) எனத் தெரியவந்தது. இதை யடுத்து திவாகரை போலீஸார் கைது செய்தனர்.
