

திருச்சி: திருச்சியில் சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், சிறுமியின் தாய் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வதாகவும், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் மாநகர காவல் ஆணையர் எம்.சத்தியபிரியாவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆணையரின் உத்தரவின்பேரில், அங்குசென்று சிறுமியை மீட்ட போலீஸார், அங்கிருந்த அச்சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ரமீஜாபானு(50), சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் மலையன்விளை கிராமத்தைச் சேர்ந்தவரும், தற்போது சென்னை துரைப்பாக்கத்தில் வசிப்பவருமான பா.பிரபின்கிறிஸ்டல்ராஜ்(40), ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தெரியவந்தது குறித்து, மாநகர காவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது: பாலியல் வன்கொடுமைக்குள்ளான இச்சிறுமியை பெரம்பலூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சிறுமியின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன்பின் குடும்ப பிரச்சினைகள் காரணமாக அச்சிறுமி கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டுக்கு வந்து வசித்து வந்துள்ளார்.
அப்போது அச்சிறுமியை, தான் வாங்கிய கடனுக்காக ரமீஜா பானுவிடம் அவரது தாய் வேலைக்கு அனுப்பியுள்ளார். அங்கு ரமீஜா பானுவும், பிரபின் கிறிஸ்டல்ராஜூவும் சேர்ந்து அச்சிறுமியை ஏமாற்றி, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின்பேரில் கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரபின் கிறிஸ்டல்ராஜ், ரமீஜாபானு, சிறுமியின் தாய் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மேலும், சிறுமியின் கணவர் பாலமுருகன், அவரது பெற்றோர் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின்கீழும், போக்சோ சட்டத்தின்கீழும் வழக்குப் பதிவு செய்வது குறித்து போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.