உ.பி.யில் எலியை சாக்கடையில் மூழ்கடித்து கொன்றவர் மீது போலீஸார் குற்றப்பத்திரிகை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

பரேலி: உ.பி. மாநிலம் பரேலி மாவட்டம், பதாயு நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார் (30). குயவரான இவர் கடந்த ஆண்டு நவம்பரில் எலி வாலில் கல்லை கட்டி அதை சாக்கடையில் வீசினார். கல்லின் கனத்தினால் எலி மேலே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கி துடிதுடித்து இறந்தது.

இறந்த எலியை விகேந்திர சர்மா என்ற விலங்குகள் நல ஆர்வலர் சாக்கடையில் இருந்து எடுத்தார். பிறகு அவர் மனோஜ் குமாருக்கு எதிராக சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் மனோஜ் குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மனோஜ் குமாருக்கு உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இறந்த எலியின் உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் எலி தண்ணீரில் மூழ்கடித்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கை, வீடியோ ஆதாரம், உள்ளூர் மக்களின் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் மனோஜ்குமாருக்கு எதிராக விசாரணை அதிகாரி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். போலீஸ் சர்க்கிள் அதிகாரியின் சரிபார்ப்புக்கு பிறகு இது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என போலீஸார் நேற்று தெரிவித்தனர். எலி கொல்லப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது உ.பி.யில் இதுவே முதல் முறை என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

புகார் அளித்த விகேந்திர சர்மா கூறும்போது, “எலிகள் பலருக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக இருந்தாலும் அது கொல்லப்பட்ட விதம் கொடூரனமாது. எதிர்காலத்தில் விலங்குகளை எவரும் இதுபோல் கொல்ல முயற்சிக்க கூடாது என்பதற்காகவே இந்த வழக்கை நான் பின்தொடர்கிறேன்” என்றார்.

குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் குமார் கூறும்போது, “எனது குழந்தைகள் தான் எலியை கொன்றனர். அதை எடுத்து சாக்கடையில் போட்டது மட்டுமே நான் செய்தது. இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவச் செய்துவிட்டனர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in