

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, அவ்வையார் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தங்க நகைக்கடை மற்றும்துணிக்கடை நடத்தி வருகிறார். ஏழுமலை என்பவர் இவரது கடையில்பணியாற்றுகிறார். இந்நிலையில் விக்னேஷ் கடந்த 5-ம்தேதி ஏழுமலையிடம் தங்க நகைகளைக் கொடுத்து லேசர் கட்டிங் செய்வதற்காகச் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன்படி சென்னை, பாரிமுனை வந்து வேலையை முடித்துவிட்டு, சுமார் 30 பவுன் தங்க நகைகள் அடங்கிய பையுடன் இரவு 7.30மணியளவில் ஏழுமலை திருவண்ணாமலைக்கு செல்வதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார்.
பின்னர் நடைமேடையில் நின்று கொண்டிருந்த செய்யாறு செல்லும் தனியார் பேருந்தில் இடம் பிடிப்பதற்காகத் தங்க நகைகள் அடங்கிய பையை ஜன்னல் வழியாகப் பேருந்தின் உள்ளே இருக்கையில் போட்டுவிட்டு, சுற்றிவந்து பேருந்தில் ஏறிப் பார்த்தபோது, பையை யாரோ திருடிவிட்டது தெரியவந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து உடனடியாக சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸாரின் விசாரணையில் நகைத் திருட்டில் ஈடுபட்டது சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரை, அறிஞர் அண்ணாநகர் 2-வது தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 30பவுன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.