

சென்னை: போலீஸ் எனக்கூறி கோயம்பேட்டிலிருந்து இளைஞரை காரில் கடத்தி செயின், ஐபோன்களை வழிப்பறி செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், காஜா தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அல்பான் (22). இவர், அதே பகுதியைச் சேர்ந்த முகமது அஸ்வர் என்பவர் நடத்தி வரும் பேன்ஸி கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் முகமது அஸ்வர் கடந்த 5-ம் தேதி இரவு 20 ஆப்பிள் ஐ-போன்கள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட 9 தங்கச் செயின்களை தன்னிடம் வேலை செய்து வரும் முகமது அல்பானிடம் கொடுத்து, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.
அதன்படி முகமது அல்பான் பொருட்களை பையில் எடுத்துக்கொண்டு திருச்சியிலிருந்து பேருந்தில் ஏறி 6-ம் தேதி காலை சென்னை கோயம்பேடு வந்திறங்கி, மாநகர பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு காரில் வந்த 3 பேர் தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு முகமது அல்பானை காரில் ஏற்றிச்சென்று திடீர் தாக்குதல் நடத்தினர். பின்னர், அவரிடமிருந்த ஐ-போன்கள் மற்றும் தங்கமுலாம் பூசப்பட்ட செயின்கள் அடங்கியபையை பறித்துக்கொண்டு வண்டலூர் அருகே முகமது அல்பானை இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
முகமது அல்பான் இதுகுறித்து சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில், முகமது அல்பானை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது திருச்சி, துவாக்குடியைச் சேர்ந்த வசந்தகுமார் (38), அவரது கூட்டாளி அதே பகுதியைச் சேர்ந்த சர்புதீன் (38) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார் தலைமறைவாக உள்ள மற்றொரு கூட்டாளியை தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.