

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செல்போன் பறித்துக் கொண்டு தப்பியோடிய இளைஞரை போலீஸார் விரட்டி பிடித்தனர்.
சென்னை ஆயிரம் விளக்கு கிரிம்ஸ் சாலையில் நேற்று முன்தினம் மாலை நடந்து சென்று கொண்டிருந்த சுதீப் முகர்ஜி (21) என்ற இளைஞரின் செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்து கொண்டு தப்பினர்.
இதையடுத்து அவர் கூச்சல் போடவே, அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த அபிராமபுரம் காவல் நிலைய தலைமை காவலர் சரவணன் மற்றும் தினேஷ் ஆகியோர் செல்போன் பறித்து சென்றவர்களை பிடிக்க தங்கள் வாகனத்தில் துரத்தினர். எழும்பூர் நீதிமன்றம் அவர்களை மடக்கி பிடித்தனர்.
அப்போது, பின்னால் அமர்ந்திருந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவரை பிடித்து ஆயிரம் விளக்குபோலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் தேனாம்பேட்டையை சேர்ந்த விவேக் (27) என்பதும், அவர் மீது ஏற்கெனவே பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் சோதனை நடத்திய போது, அதே நாளில் வழிப் பறி செய்த மேலும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்ததுடன், தப்பி ஓடிய விவேக்கின் நண்பர் விஷ்ணு என்பவரை தேடி வருகின்றனர்.