Published : 09 Apr 2023 02:30 PM
Last Updated : 09 Apr 2023 02:30 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞர் உயிரி ழந்தார். இதுதொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி மூலக்குளம் அடுத்துள்ள முத்துப் பிள்ளை பாளையம் ராதாநகர் 3-வது குறுக்கு வீதியில் வசிப்பவர் குசும்குமாரி. இவரது மகன் விஷால் (26). பிஇ முடித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் 7 பேருடன் ஓட்டலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நண்பர்கள் காரில் சென்றனர். விஷால் மட்டும் பைக்கில் காரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
அவர் லபுர்தனே வீதியில் பொதுப் பணித்துறை அலுவலகம் அருகில் வந்தார். அப்போது சாலையோரம் நின்றிருந்த பெண் உள்ளிட்ட 5 பேர் கும்பல் வாகனத்தில் வருவோரை மறித்து ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களை கண்ட விஷால் பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கும்பலில் இருந்த ஒருவர் விஷாலைத் தட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இருசக்கர வாகனம் நிலைகுலைந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி கீழே விழுந்தது. இதில் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கும்பலை சேர்ந்தோர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஷால் உயிரிழந்தார். இத்தகவல் அறிந்ததும் விஷாலின் உறவினர்கள், நண்பர்கள் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று ஒதியஞ் சாலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், "சாலையில் நின்று ரகளை செய்த கும்பல் தட்டிவிட்டதால் பைக்கில் வந்த விஷால் கீழே விழுந்து உயிரிழந்தார். ரகளை செய்த கும்பலை கைது செய்ய வேண்டும்" என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை சமாதானம் செய்த போலீஸார், உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை ஏற்ற அவர்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து ஒதியஞ்சாலை போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே விஷால் இருசக்கர வாகனத்தில் வரும் போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் விஷாலை கையால் ஓங்கி அடிப்பது போன்ற சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதனடிப்படையிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT