

சென்னை: போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக சென்னையில் ஒரே வாரத்தில் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய “போதை தடுப்புக்கான நடவடிக்கை” என்ற பெயரில் காவல் ஆணையர் சங்கர்ஜிவால் சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 7 நாட்களில் போதைப் பொருள்கடத்தலில் ஈடுபட்டதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், ``சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல் உட்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.