கனடாவில் இருந்து ஹரியாணா வந்த காதலியை சுட்டுக் கொன்ற நபர் - ஓர் ஆண்டுக்குப் பின் உடல் கண்டெடுப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சோனிபட்: ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை அவரது காதலன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அதோடு அவரது உடலை புதைத்தும் உள்ளார். இந்த நிலையில், அந்தப் பெண்ணின் உடலை (எலும்புகள் மட்டும்) போலீஸார் கண்டெடுத்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூனில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தக் கொலை குற்றத்தை செய்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

23 வயதான மோனிகா என்ற பெண்தான் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கனடாவில் இருந்து காதலன் சுனிலை பார்க்க கடந்த ஆண்டு இந்தியா வந்துள்ளார். கனடாவில் மோனிகா மேற்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் காசியாபாத் பகுதியில் உள்ள கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். சுனிலுக்கு ஏற்கெனவே வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி, இரு குழந்தைகளும் உள்ளது என போலீஸார் தெரிவித்துள்ளனர். இது மோனிகாவுக்கும் தெரியும் என விசாரணையில் சுனில் தெரிவித்துள்ளார்.

கனடாவில் குடியேறும் நோக்கில் சுனில், மோனிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், அது கைகூடாத காரணத்தால் கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அதோடு தனது பண்ணை வீட்டை சுற்றி இருந்த நிலத்தில் சுமார் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் எடுத்து மோனிகாவின் உடலை புதைத்துள்ளார். மோனிகா குடும்பத்தினர் அவரை காணவில்லை என கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தக் கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் எப்போது இந்தியா வந்து சென்றார் என்பதை வைத்து போலீஸார் இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

மோனிகா கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா வந்தது, அவரது குடும்பத்திற்கு தெரியாது எனத் தெரிகிறது. அதை அடிப்படையாக வைத்து அவர் கொலை செய்யப்பட்டதை கண்டறிந்துள்ளனர். சுனிலை கடந்த 2-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in